ஐதராபாத்: பச்சிளம் குழந்தைகளுக்கு தரப்பட்ட வலிநிவாரணியால், 2 குழந்தைகள் மரணமடைந்துவிட்டதோடு, 32 குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; ஐதராபாத்திலுள்ள நம்ப்பல்லி நகர்ப்புற சுகாதார மையத்தில், தொண்டை அழற்சி, கக்குவான், தசை இறுக்கு நோய் உள்ளிட்ட 5 வகை ஆபத்தான நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டன. மொத்தம் 92 குழந்தைகள் இந்த தடுப்பூசி முகாமில் பங்கேற்றனர்.

தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை தவிர்க்க, அவர்களுக்கு பாரசெட்டமால் மருந்தின் ஒரு சிறுஅளவு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தடுப்பூசிக்கு பிறகான மருந்தும் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு, குழந்தைகளின் உடல்நலனில் மாற்றம் ஏற்பட்டு, நிலைமை மோசமாகத் தொடங்கியது.

ஐதராபாத்தின் நிலோஃபர் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே 2 குழந்தைகள் இறந்துவிட்டனர். தற்போது, 32 குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அக்குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் சில மருத்துவர்களிடமிருந்து வரும் தகவல்களின்படி, குழந்தைகளுக்கு பாரசெட்டமால் கொடுக்கப்பட்ட அறிகுறிகள் இல்லை. மாறாக, ஓபியட் பெயின்கில்லர் ட்ரமடால் என்ற பெரியவர்களுக்கு கொடுக்கும் வலிநிவாரணி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி வெளியாகியுள்ளது.

இதுதான் இந்த அபாய நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், முழுமையான தகவல்கள் வந்த பின்னரே, எதையும் கூறமுடியும் என்று தெரிவிக்கின்றனர்.

– மதுரை மாயாண்டி