சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மட்டுமின்றி, பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று இந்தியாவிலும் 961 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பலருக்கு தொற்று அறிகுறி மற்றும் எஸ்-ஜீன் பாதிப்பும் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்,  ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. அதனால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒமிக்ரான் வைரஸ் தொற்று மட்டுமின்றி, பிற நோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றார்.

மேலும், தொற்று பரவலை தடுக்க மக்கள் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அவசியம் என்பதுடன், சமூக இடைவெளியுடன் செயல்பட்டால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

இந்தியாவில் இதுவரை மாநிலங்களுக்கு 149.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், 143 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.