நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் (Uzhavan Foundation) சார்பில் சாதித்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் தனது தாய் குறித்து பேசும்போது மேடையிலேயே தேம்பி அழுதார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

நீர்நிலைமீட்பு, பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம், சந்தைப்படுத்துதல் என விவசாயம் சார்ந்த புதுமைகளை விவசாயத்தில் உட்புகுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.

1. சிருஷ்டி பவுண்டேஷன் (மயிலம், திண்டிவனம்) வேளாண் சிறப்பு விருது

மனவளர்ச்சி குறைந்தவர்களை சங்கிலியால் கட்டாமல், இருட்டு அறையில் அடைக்காமல் அவர்களிடம் அன்பு காட்டி, பத்து ஏக்கர் பரப்பளவில் அவர்களைக் கொண்டு விவசாயம் செய்து அவர்கள் உணவை அவர்களே விளைவிக்க வைத்திருக்கிறார். இங்கு மனவளர்ச்சி குன்றிய 50 பேர்தான் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். விளைப் பொருட்களை மதிப்பு கூட்டியும் விற்பனை செய்து வருகிறார்கள்.. சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஒதுக்கப்பட்டவர்களை, அரவணைப்பு செய்கிறது மாத்திரை மருந்து இல்லாத ஒரு நல்வாழ்வை விவசாயத்தின் மூலம் ஏற்படுத்திருக்கிறது.

விருது வழங்கியவர், மருத்துவர் கு. சிவராமன்.

2. நம் சந்தை (கோத்தகிரி) – சிறந்த வேளாண் கூட்டுறவு

பழங்குடி மக்கள் விளைவிக்கும் விளைப் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கி லாபம் பார்த்து வந்த இடைத்தரகர்களுக்கு மாற்றாக சண்முகநாதன் என்பவர் நம் சந்தை என்ற அமைப்பை ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை கொண்டு உருவாக்கி ஒரு கூட்டுறவாக செயல்படுகிறார்கள். இந்த அமைப்பு பழங்குடி மக்களின் விளைப் பொருட்களுக்கு நல்ல விலையை பெற்று தருகிறார்கள்..

விருது வழங்கியவர்கள் – அனந்து மற்றும் சூர்யா

3. பரமேஸ்வரன்- ஒட்டன்சத்திரம்

(பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கம்)

500 க்கும் மேற்பட்ட பாரம்பரிய காய்கறி விதைகளை தேடி பரவலாக்கி வருகிறார்.. இவரிடம் கத்தரியில் 25 வகை, சுரக்காயில் 15வகை எனப் பல விதைகள் வைத்து அதை விவசாயிகளுக்கும் மக்களிக்கும் அளித்து வருகிறார்.

விருது வழங்கியவர் – பாமயன்

4. நம் அனுமன் நதி (காவல் கிணறு, திருநெல்வேலி) – நீர் நிலைகளை மீட்டெடுத்தல்.

பல வருடங்களாக பராமரிப்பு இல்லாத ஒரு ஆற்றை மீட்டெடுத்து கால்வாய்களை சரி செய்துள்ளனர். இவர்கள் செய்த பணியால் 50 ஆண்டுகள் தண்ணீரே பார்க்காத ஏரிகள் எல்லாம் மழை காலத்திற்கு முன்பே நிரம்பியது.. இந்த அனுமன் நதி மீட்டெடுத்தன் மூலம் 50 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளனர் –

விருது வழங்கியவர் – சுல்தான் அகமது இஸ்மாயில்

5. சரோஜா (பள்ளப்பட்டி, கரூர்) – சிறந்த பெண் விவசாயி….

விவசாயத்தில் தான் ஈடுபடுவதோடு மற்ற பெண்களையும் இணைத்து செயல்படுகிறார்.. தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி சந்தை படுத்துகிறார்கள்.. இவரது ஸ்பெஷல் என்பது உணவுக் காடும் ஏர் உழவாத விவசாயமும் தான்.. முருங்கையில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மதிப்பு கூட்டி சந்தைபடுத்தி வருகிறார். இதற்காக 500 விவசாயிகளை இணைத்து FPO ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

விருது வழங்கியவர் – இயக்குநர் வெற்றிமாறன்

6. சங்கனாப்பேரி விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு (தென்காசி) – சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்பு..

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இப்பெண்கள் சிறுதானிய பயிர்களை பயிரிடுவதோடு அதனுடைய முக்கியத்துவத்தை மற்ற கிராமங்களுக்கும் கொண்டு செல்கிறார்கள். தங்களிடம் உள்ள விதைகளை வருடா வருடம் விதைத் திருவிழா நடத்தி மற்ற ஊர் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.. இவர்கள் விவசாயத்திற்கு தேவையான முதலீட்டை தங்கள் சங்கத்திலயே பெற்றுக் கொள்கிறார்கள்.. நஞ்சில்லா உணவின் அவசியத்தையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

விருது வழங்கியவர் – சிவகுமார்.

தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், உழவர் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்திக் கூட ஏழை பெண் விவசாயியின் பேரன்தான். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது 10 மாதத்தில் அப்பா இறந்து போனார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் , எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார், அதனால் தான் இப்போது உங்கள் முன்னால் நிற்கிறேன் என்று தனது தாயை பற்றிக் கூறும்போதே சிவகுமார் கண்கலங்கினார்.

‘என் அம்மா எனக்கு தலை வாரிவிட்டதில்லை, உணவு ஊட்டிவிடவில்லை. தனி ஆளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார். விவசாயத்தில் அதிகமான வேலைகளை பெண்கள் தான் செய்கின்றனர். சிலையை தான் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்க்கவில்லை.பெண்கள் தான் கடவுள்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.