சமோலி: உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில்  காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 167 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து விவரம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் குறித்து உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் கூறியதாவது:

இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றங்கரையோரம் மற்றும் இடிபாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  ரெய்னி கிராமத்தில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதையில் வளைவுகள் உள்ளதால் இடிபாடுகளை அகற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கூற முடியாது. வல்லுநர்களை கொண்டு மாற்று நுழைவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.