டேராடூன்: உத்தரகாண்டில்  ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்துக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகது. வெள்ளப் பாதிப்பு குறித்து, அம்மாநில  முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

கேரளவைப் போல, உத்தரகாண்டிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல  பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் முடங்கி உள்ளன. பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு 65 சதவீத சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக அங்குள்ள கவுலான் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஊருக்கும், அருகே உள்ள மற்றொரு ஊரையும் இணைக்கும் பாலம் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், இரு ஊர்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக  பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடுமையான மழை வெள்ளத்துக்கு இதுவரை 16 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பு நிலவரம் குறித்து  பிரதமர் மோடி அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்து உள்ளார்.