கொச்சி

கேரள மாநிலத்தில் வழக்கத்தை விட 135% கூடுதல் மழை  பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது.   இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.   கேரள மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.   பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளம் காரணமாகச் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்து அடியோடு நின்றுள்ளது.

மாநிலம் முழுவதும் வெள்ளம் உண்டாகி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக கோட்டயம், இடுக்கி, ஆகிய மாவடங்கள் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுப் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.  இதுவரை  கேரளாவில் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த மாதம் கேரளாவில் வழக்கத்தை விட 135% கூடுதலாக மழை பெய்துள்ளது.   எப்போதும் அக்டோபர் 1 முதல் 19 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் 192.7 மிமீ மழை பெய்வது வழக்கமாகும்.  இப்போது 435.5 மிமீ மழை பெய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.