ராஜஸ்தான்: 
தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.  மேலும், நாட்டில்  விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் விவசாய சட்டங்கள் குறித்து எங்களால் விவசாயிகளுக்குப் புரியவைக்க முடியவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன்.  இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய  ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, “விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களைத் திரும்பப் பெற்று, தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிறது” எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.