புதுடெல்லி:
தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 19-ஆம் தேதி  காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.  மேலும், நாட்டில்  விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் விவசாய சட்டங்கள் குறித்து எங்களால் விவசாயிகளுக்குப் புரியவைக்க முடியவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன்.  இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்தார். பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தும், விமர்சித்தும் வரும் நிலையிலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வேளாண் சட்டம் வாபஸ் குறித்து சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது பாஜகவின்  தந்திரம் என்று கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தேர்தலுக்குப் பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைவர்களின் அறிக்கை விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும்,  தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.