தேனி

நீட் தேர்வை எதிர்த்துப் போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்தது. இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 1,066 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.

மேலும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட உதயநிதி வீரபாண்டியில் நடந்த திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

உதயநிதி தனது உரையில்,

“நாங்கள் ‘நீட்’ விலக்கு நம்முடைய இலக்கு என்று மாபெரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் இந்த ஒரு உதயநிதி களத்துக்கு வந்தால் பற்றாது.  மாறாக நீங்கள் அத்தனை பேரும் உதயநிதியாக மாறி களத்திற்கு வர வேண்டும். 

நான் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீர்கள்.  ‘நீட்’ தேர்வு விலக்கு வந்து விட்டால் அந்த ஒட்டுமொத்த பெருமையையும் நான் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன். 

நான் இதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்றும் ஒப்புக்கொள்கிறேன். இந்த ‘நீட்’ தேர்வு ஒழிப்பு என்பது நாடகம் என்கிறார்கள். நாங்கள் நீட் தேர்வினால் இன்னொரு உயிர் போய்விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.” 

என்று தெரிவித்துள்ளார்.