திருச்சி

திருவெறும்பூர் அருகே ஆய்வாளர் உதைத்ததால் பைக்கில் இருந்து விழுந்து மரணம் அடைந்த உஷாவின் கணவர் ராஜா ஆய்வாளர் மீது கொலை வழக்கு போடவேண்டும் என கூறினார்.

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டியான ராஜாவை ஜீப்பில் துரத்திய காவல்துறை ஆய்வாளர் காமராஜ் ராஜாவின் பைக்கை எட்டி உதைத்துள்ளார்.   அதனால் ராகவுடன் சென்ற அவரது கர்ப்பிணி மனைவி உஷா கீழே விழுந்து மரணம் அடைந்தார்.   அதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.    இந்நிலையில் நடந்த நிகழ்வுகள் பற்றி செய்தியாளர்களிடம் ராஜா கூறி உள்ளார்.

அவர், “நானும் என் மனைவியும் இருசக்கர வாகனத்தில் ஒரு திருமணத்துக்கு சென்றுக் கொண்டிருந்தோம்.   அந்த திருமணத்தில் பரிசளிக்க ஒரு வெட் கிரைண்டர் வாங்கி எடுத்துச் சென்றோம்.   பஸ்ஸில் அதை எடுத்துச் செல்வது சிரமம் என்பதால் இருசக்கர வாகனத்தில் சென்றோம்.   துவாக்குடி அருகே உள்ள சுங்கச்சாவடியில் இருந்த காவலர் நான் ஹெல்மெட் அணியாததால் நிறுத்தினார்.

நான் எனது மனைவியுடன் அவசரமாக செல்வதாக சொன்னதை ஆய்வாளர் காமராஜ் கண்டுக் கொள்ளவில்லை.   நான் லக்கேஜ் வைத்திருந்தேன்.  அருகில் ஒரு கார் இருந்தது.   அதனால் நான் ஜாக்கிரதையாகவே இருந்தேன்.   அந்தக் காரை தாண்டி நான் எனது வாகனத்தை நிறுத்தினேன்.   ஆய்வாளர் எனது சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.   நான் வண்டியை அங்கு நிறுத்த முடியாத காரணத்தை சொன்னேன்.    ஆனால் அதை கவனியாமல் பைக்கின் சாவியை எடுக்க ஆய்வாளர் முயன்றார்.   அதன் பிறகு அதை எடுக்காமல் தனது ஜீப்பை நோக்கி சென்றார்.

அவர் என்னிடம் பணம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்.   நான் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்திருந்தால் அதை செலுத்தி இருப்பேன்.  ஆனால் அவர் எதுவும் கேட்காமல் ஜீப்புக்கு சென்றதால் நான் எங்களை அவர் விட்டு விட்டார் என நினைத்து வண்டியை செலுத்தினேன்.    அவர் எங்களுக்கு ஏதோ பாடம் கற்பிக்க நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.  ஜீப்பில் எங்களை துரத்தி வந்தார்.

அவர் அருகில் வந்த பிறகே அவர் துரத்தி வந்தது எனக்கு தெரிந்தது.   அவர் எதுவும் கூறாமல் காலால் என் பைக்கை எட்டி உதைத்தார்.  நான் வாகனத்தை நிறுத்தினேன்.   அப்போது மீண்டும் என் மனைவியை எட்டி உதைத்தார்.   அது குறித்து நான் ஏதும் கேட்கும் முன்பு மூன்றாவதாக உதைத்தார்.   அப்போது வண்டியுடன் நானும் உஷாவும் கீழே விழுந்தோம்.    அப்போது எனக்கும் உஷாவுக்கும் படுகாயம் ஏற்பட்டது.  உஷா அங்கேயே இறந்து விட்டார்.

நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.   எனது வாழ்க்கையே எனது மனைவிதான்.   நான் இப்போது எனது வாழ்க்கையை அந்த ஆய்வாளரால் இழந்துள்ளேன்.     எனக்கு நீதி வேண்டும்.   இன்னொருவருக்கு இது போல துயரம் நிகழக் கூடாது. எங்களை அவர் ஏன் உதைக்க வேண்டும்.  இழந்த என் வாழ்க்கையை யாரால் மீட்டுத் தர முடியும்?    இதற்காக அவர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.   அதுவரை நான் விட மாட்டேன்” என கூறி உள்ளார்.