சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில், ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா தயாரிப்பான, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, ஐதராபாத்தில் உள்ள பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படு கின்றன. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், முன்களப் பணியாளர்களிடையே, கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் உள்ளதாகவும், அதனால், அதற்கான தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருபபதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பயனர்கள், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளில், எது வேண்டுமானாலும் விருப்பத்துக்கு ஏற்ப பயனாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். சென்னையில் கோவாக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை மதுரையில் கோவேக்சின் தடுப்பூசி போட விரும்புபவர்கள் திருச்சி சென்று போட வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுபோல பல மாவட்டங்களில் கோவாக்சின் போட விரும்பும் பயனர்கள் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது.
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 6 ஆக இருந்த கோவாக்சின் தடுப்பூசி மையங்கள் 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 25 மாவட்டங்களில் கோவாக்சின் தடுப்பூசி மையங்கள் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் முழுவதும் 646 மையங்களில் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 82 சுகாதார பணியாளர்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த மாவட்டத்துக்கு 10 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.