வாஷிங்டன்: அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் கொண்டுவரப்பட்ட தேசிய நெருக்கடி முடிவை, அமெரிக்க செனட் சபை நிராகரித்துவிட்டது.

டிரம்ப்பின் முடிவை எதிர்த்து கொண்டுவரப்பட்ட இந்தக் கூட்டு மசோதாவுக்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதிபரின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து, டிரம்ப்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளனர்.

அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் சபையிலும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகள் கிடைத்தன. அதிபர் டிரம்ப்பின் தேசிய நெருக்கடியானது, பென்ட்டகனின் ராணுவ கட்டமைப்பு நிதியிலிருந்து, 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை, தடுப்புச் சுவர் கட்டும் நோக்கத்தின் பொருட்டு திருப்பி விடுவதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிபருக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கும் இந்த தேசிய நெருக்கடியை, அந்நாட்டின் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

– மதுரை மாயாண்டி