இந்திய ரயில்வே-வுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 30 சதவீதம் கமிஷனாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அரசுத் துறை நிறுவனத்துக்கு கிக்-பேக் வழங்கியது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆரக்கிள்’ நிறுவனம் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்ததுடன் இதற்காக அபராதமும் விதித்துள்ளது.

லஞ்சம் கொடுப்பதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற இந்திய விதியை சுட்டிக்காட்டி அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் இந்திய ரயில்வே அமைச்சகமும் எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.

டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனமான ‘ஆரக்கிள்’ இந்திய ரயில்வே துறைக்கு கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில் தாங்கள் கோரியிருந்த தொகையில் 30 சதவீதத்தை கமிஷனாக தர சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தங்களது பில்லில் பணிக்கான மொத்த தொகையை குறிப்பிட்டு அதில் 30 சதவீதம் சலுகை செய்யப்பட்டதாக காட்டியுள்ளது.

இந்த டிஸ்கவுண்ட் தொகையை பயனாளிகளுக்கு ஹவாலா போன்ற மாற்று வழியில் வழங்கி இருக்கிறது.

அமெரிக்க அரசு மேற்கொண்ட விசாரணையில் இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய் கமிஷனாக கைமாறியது தெரியவந்ததை அடுத்து ‘ஆரக்கிள்’ நிறுவனம் மீது அபராதம் விதித்துள்ளது.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கருப்பு ஆடுகள் யார் என்பது குறித்தும் அவர்கள் மீதான விசாரணை குறித்தும் இந்திய புலனாய்வு அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.