அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக் கொண்டு வந்த அமெரிக்க C17 ராணுவ சரக்கு விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை வந்தடைந்துள்ளது.
அமெரிக்க விமானப்படையால் இயக்கப்படும் இந்த விமானம், டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று PTI தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் முதல் அலை இதுவாகும். நாடு கடத்தப்படுபவர்களில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள், பெரும்பாலும் “கழுதை வழிகள்” அல்லது பிற சட்டவிரோத முறைகள் மூலம் அமெரிக்காவுக்குள் ஊடுருவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 1100 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இதன் தொடர் நடவடிக்கையாக தற்போது டிரம்ப் நிர்வாகம் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.