உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன் மூலம் தங்கள் பாவங்கள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

அதிலும் கும்பமேளா மற்றும் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா நிகழ்வின் போது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி நீராடுவது பெரும்பாவங்களை போக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று வரை சுமார் 38 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக இன்று காலை உ.பி. வந்த பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள அரளி காட் பகுதியில் இருந்து படகில் சிறிது தூரம் பயணித்தார்.

பின்னர், பிரதமர் நீராடுவதற்கு என்று ஏற்படுத்தப்பட்டிருந்த இடத்தில் பகல் 11:20 மணியளவில் இறங்கி நீராடினார்.

கையில் உத்திராட்ச மாலையுடன் மந்திரங்களை ஜெபித்தபடி மூன்று முறை நீரில் தலையை மூழ்கி எழுந்த பிரதமர் மோடி பின்னர் கங்கை கரையில் நின்று தீப ஆராதனை செய்து வழிபட்டார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது பாக்கியம்.

சங்கமத்தில் நடைபெறும் ஸ்நானம் தெய்வீக தொடர்பின் ஒரு தருணம், அதில் பங்கேற்ற கோடிக்கணக்கானவர்களைப் போலவே, நானும் பக்தி உணர்வால் நிரப்பப்பட்டேன்.

கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.