“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், நாங்கள் அதை சொந்தமாக்குவோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவின் இந்த திட்டத்தை அனைவரும் விரும்புகிறார்கள் என்று மூச்சிரைக்க கூறினார் டிரம்ப்.

இந்த திட்டம் குறித்து விவரித்த டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் 18 லட்சம் பேரும் மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் இருந்து வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவும் கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இறையாண்மையுடன் கூடிய ஒரு பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு அமெரிக்காவின் நட்பு மற்றும் நேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் எகிப்த் அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியும் பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினர்.

“இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகவும், இரு நாடுகள் தீர்வுக்கு ஒரு தடையாகவும், எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு ஒரு பெரிய ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் சக்தியாகவும் இருக்கும்” என்று இரு தலைவர்களும் கூறியதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் இதை “அதிர்ச்சியூட்டும்” திட்டம் என்றும், “பாலஸ்தீன தேசத்தை முற்றிலுமாக அழிக்க சியோனிச ஆட்சியின் (இஸ்ரேல்) இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தின் தொடர்ச்சி” என்றும் கூறினார்.

பாலஸ்தீன அதிகாரிகள், அரபுத் தலைவர்கள் மற்றும் உரிமைகள் குழுக்கள் டிரம்பின் கருத்துக்களை விரைவாகக் கண்டித்தன.

காசாவில் இன அழிப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரித்தது.

ஐ.நா. தலைவர் குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில் “மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது இன அழிப்புக்கு சமம்” என்று ஐ.நா. தலைவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த கருத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

பாலஸ்தீனியர்கள், அரபு அரசாங்கங்கள் மற்றும் உலகத் தலைவர்களிடமிருந்து வந்த விமர்சன அலையை எதிர்கொண்ட டிரம்பின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, காசாவாசிகளை மாற்றுவது தற்காலிகமானது என்று கூறினார், அதே நேரத்தில் அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதில் வெள்ளை மாளிகைக்கு உடன்பாடு இல்லை என்று உறுதிப்படுத்தினார்.

டிரம்பின் இந்த யோசனை ” விரோத நடவடிக்கை இல்லை” என்று கூறிய ரூபியோ, இது ஒரு “தாராளமான நடவடிக்கை – மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சலுகை மற்றும் மீண்டும் கட்டியெழுப்புதலுக்குப் பொறுப்பேற்பது” என்று விவரித்துள்ளார்.

அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுவான ஹமாஸுக்கும் இடையே 15 மாதங்களுக்கும் மேலாக நடந்த போருக்குப் பிறகு, காசாவின் மறுகட்டமைப்புக்கு வாஷிங்டன் நிதியளிக்காது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் பின்னர் கூறினார்.

அமெரிக்க கட்டுப்பாட்டில் காசா… டிரம்பின் தன்னிச்சையான அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம்…