கதற வைக்கும் கனவு தேசம்..

சிறப்பு கட்டுரை:

முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்….

ரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான்.

பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை.

பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம்.

உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை தேட, அதிக அளவில் பொருள் சம்பாதிக்க எனக் காரணங்கள் பல உண்டு.

இப்படிப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் சட்ட விரோதமான குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாது..அப்படி ஏற்றுக் கொள்வது உள்நாட்டு மக்களுக்கு எதிரான செயல்.

ஒரு நாட்டு அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கால் உயிருக்கு அஞ்சி அகதிகளாய் தஞ்சம் புகும் மக்களை மனிதாபிமானம் என்று வரும்போது அவர்களை அடித்து விரட்ட முடியாது,

அதே நேரத்தில் வாருங்கள் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாரி அணைத்து விடவும் முடியாது. அப்படி அணைக்கத் தொடங்கினால் அகதிகள் பெருகி உள்நாட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே பெரும் பிரச்சனை மூலம்.

இதைப் பற்றி பேசினால் விரிவாக விரிவாக போய்க் கொண்டே இருக்கும்.

ஆனால் அதிக பொருளீட்டும் ஆசையால் திட்டமிட்டே கள்ளத்தனமாய் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவும் நபர்கள் விவகாரம் என்பது மிகவும் வில்லங்கமானது.

வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்து போய் ஏமாற்றி கைவிடப்படும் அப்பாவிகளிலிருந்து இந்த திட்டமிட்ட ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

துரதிஷ்டவசமாக, சட்டவிரோத குடியேற்றம் என்று வரும்போது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் இந்த பேதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.

ஆனால் சட்டவிரோத குடியேறிகளை கையாளும் விவகாரத்தில் அடுத்த எடுப்பிலேயே காட்டத்தை காட்டாமல் உண்மையான போக்கில் ஆரம்பிப்பார்கள்.

எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து பராமரிப்பு என்பது பெரும் பொருட் செலவு பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் தேவையற்றதும் கூட என்று கருதுவார்கள்.

அதனால்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது, ஒட்டுமொத்த வகையில் பொது மன்னிப்பு கொடுத்து, நாட்டை விட்டு சுயமாக வெளியேற கால அவகாசம் தருவார்கள்.

இன்னொரு பக்கம் உங்கள் நாட்டில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளை, குடிமகன்களை நீங்களே உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அழைப்பு விடுவார்கள்.

இந்த வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் அலட்சியப்படும் பட்சத்தில்தான் வலுக்கட்டாய வெளியேற்றத்தை நிகழ்த்துவார்கள்.

அப்போது கூட மனிதர்களை கால்நடைகளைப்போலவோ பொருட்களை போலவோ கருதாமல் அடிப்படை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வழியாகத்தான் வெளியேற்றம் செய்வார்கள்.

நம்மூரிலேயே நம்ம ஊரிலேயே எடுத்துக் கொள்வோமே..

தேடுதல் வேட்டையின் போது தொலைதூரத்தில் கைது செய்யப்படும் கூடிய குற்றவாளிகளை க்கூட, ஒன்று காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்வார்கள். அல்லது பயணிகள் பயணிக்கும் பேருந்து ரயில் போன்ற பொது போக்குவரத்தில் கொண்டு செல்வார்கள்..

ஆடு மாடுகளைப் போல அடைத்து சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள்.

ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட கொடுஞ்செயலைத்தான் செய்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டே தீருவார்கள் என்று சொன்னதோடு, மின்னல் வேகத்தில் 104 இந்தியர்களை பயணிகள் விமானத்தை தவிர்த்து ராணுவ விமானத்தில் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது.

அதுவும் எப்படி? கைவிலங்கிட்டு.

சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுமார் 20 மணி நேர பயணம்.

104 பேர் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அனைவரும் ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இத்தனைக்கும் பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது ஐந்து மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை.

ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே அமெரிக்கா நிர்மாணிக்கிறது.

பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், மேலும் சில ராணுவ விமானங்கள் இதுபோல இந்தியர்களை அள்ளி வந்து கொட்டி விட்டு போகும் என்பதை மறுக்க இயலாது என்றும் சொல்கிறார்கள்.

கடந்த மாதம் இதே போன்று ராணுவ விமானங்களில் சட்டவிராத குடியேறிகள் என்று அள்ளிக் கொண்டு போன இரண்டு ராணுவ 2 அமெரிக்க ராணுவ விமானங்களை இறங்க அனுமதி மறுத்து விட்டது கொலம்பியா..

ஆயிரம் இருந்தாலும் தங்கள் நாட்டு குடிமக்களை கண்ணியமற்ற முறையில் கை விலங்கிடப்பட்டு கால்நடைகள் போல் அடைக்கப்பட்டு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சீறினார் கொலம்பியா அதிபரான கஸ்ட்ராவோ பெட்ரோ.

பின்னர் தங்கள் நாட்டு விமானங்களை அனுப்பி அமெரிக்காவிலிருந்து கௌரவமாக அழைத்து வரச் செய்தார் அந்த அதிபர் ..

நாம்தான் நமது அரசாங்க விமானங்களை விற்பனை பிரியர்கள் கையில் எப்போதோ தாரை வார்த்து விட்டு விட்டோமே..