சென்னை:

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுங்கள் என்று பாராளுமன்ற சபாநாயகருக்கு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

டெல்லி வன்முறைகுறித்து விவாதிக்க கோரி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே, நாடாளுமன்றத்தினுள் அவைத் தலைவா் மேஜையில் இருந்த  ஆவணங்களை கிழித்து எறிந்தனர்.

இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்தாகூர் எம்.பி. உள்பட 7 எம்.பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள்மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,  7 காங்கிரஸ் எம்பிக்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும். டெல்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற 7 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் ஆலயம் நாடாளுமன்றம் என கூறப்படுவதை பாஜக நினைவில் கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.