சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கொரோனா 3வது அலை என்று கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில்  தற்போது, 1,61,171 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர். இரு கடந்த இரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. பலர் மூச்சுத் திணறல் காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆக்சிஜன் தேவையும் நான்கு மடங்கு அதிகாரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது.  தற்போதைய சூழலில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என குறிப்பிட்ட அவர் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேர்தல் தொடர்பாக எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதனால்,  தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை மறுதினம் (ஜனவரி 21) மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

ஜனவரி 27ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தேர்தலுக்கு தடை விதிக்கும்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]