சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் களத்தில் குதித்த தயாராகி வருகின்றன. கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் திமுக தலைமையுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. நேற்று காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இன்று விசிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.