சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,  தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள11 ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி,  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான  12,838 வார்டுகளுக்கு உரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதையடுத்து,  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டு உள்ளவர்கள் அல்லது வாக்குச்சீட்டு இல்லாதவர்கள் 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து  மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு (Booth Slip) உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை (EPIC), அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

1) ஆதார் அட்டை

2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

3) புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

4) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு எஸ்மார்ட் கார்டு

5) ஓட்டுநர் உரிமம்

6) நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)

7) தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (Smart Card)

8) இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)

9) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10) மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறும் கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11) பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

எனவே, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.