சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னை மாநகராட்சி வார்டுகள் இட ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் பட்டியலினத்தவர்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்கக்கோரி உத்தரவிட வேண்டும் என பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதுபோல பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டுகள் இட ஒதுக்கீடு பட்டியலை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் மற்றும் நகராட்சிகள், பேருராட்சிகளில் வார்டுகள் எந்தெந்த சமூகத்தினருக்கு, பெண்களுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை உள்பட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும், ஆதி திராவிடர்களுக்கு 85, பழங்குடியினருக்கு 3 பொதுப் பிரிவு பெண்களுக்கு 200 பேரூராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில், பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பதவி ஏற்கனவே பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.