கோவை: கோயமுத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி இடங்களை பிடிக்க அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக வாக்காளர்களை கவர அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கும் பணிகளும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுவரை ஒருவரையும் கைது செய்யாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவகத்திற்கு மனு அளிக்க வந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் , ஜனநாயக முறைப்படியும், பாதுகாப்புடன் நடத்த வலியுறுத்தி, எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த திமுகவினரையும், கரூர் மாவட்டத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ள திமுகவினரையும் கோவை மாவட்டத்திலிருந்து வெளியேற்றக் கோரி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ” கோவை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது; கோவையில் பாதுகாப்புக்கு ராணுவத்தினரை பணியில் அமர்த்த வேண்டும் என்று ரவுடிகளை வெளியேற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும். நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.
கோவையில் மீண்டும் சம்பவம்: பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’ பறிமுதல்…