சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மட்டும் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து 24 மணிநேரமும் வாகன சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளும் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளது. வாக்காளர்களை கவரும் அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள், பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 37 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.