டில்லி
அனைத்துக் கட்சிகளுமே ஒரு காலகட்டத்தில் அபார வெற்றியும் படு தோல்வியையும் சந்தித்துள்ளன என ஆங்கில ஊடகமான நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட் பல எதிர்க்கட்சிகள் படு தோல்வி அடைந்துள்ளன. இதையொட்டி ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆங்கில செய்தி ஊடகமான நேஷனல் ஹெரால்ட் தற்போதைய அரசியல் குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் இதோ.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் தோல்வி அடைவது என்பது சோகத்தை அளிக்கும். ஆனால் இந்த நிலை இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் உள்ளது. இதனால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சித் தொண்டர்கள் தோல்வியில் துவளாமல் கடந்த கால சரித்திரத்தை சற்றே பின் நோக்கி கவனிக்க வேண்டும்.
தற்போதைய ஆளும் கட்சியான பாஜக இதே நிலையில் கடந்த 2004 முதல் 2014 வரை இருந்தது. தேர்தலில் வெற்றி பெற தனது பிரதமர் வேட்பாளரை வாஜ்பாயியில் இருந்து அத்வானியாக மாற்றி அதன் பிறகு மோடியை அறிவித்து வெற்றிகண்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த அத்வானி தனது பாகிஸ்தான் பயணத்தில் ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என விமர்சித்தார்.
இதனால் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பல தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதை ஒட்டி வாஜ்பாயை ஓரம் கட்டி முன்னுக்கு வந்த அத்வானியும் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். அது மட்டுமின்றி ஜின்னாவை குறித்து ஒரு புத்தகம் எழுதியதால் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜஷ்வந்த் சிங் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த புத்தகத்தில் பிரிவினைக்கு காரணம் ஜவகர்லால் நேரு எனக் குறிப்பிட்டிருந்த போதிலும் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது.
தற்போதுள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் பதவியில் இருந்தவர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்தவற்றை காங்கிரஸார் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் வரக்கூடாது என பாஜக பெரிதும் முயன்றது. காங்கிரஸ் சார்பில் வெளிநாட்டில் பிறந்த சோனியா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் தாம் மொட்டை அடித்துக் கொள்வதாக சுஷ்மா ஸ்வராஜ் மிரட்டியது நினைவிருக்கலாம்.
சுஷ்மா ஸ்வராஜின் இந்த பேச்சுக்கு அவருடைய கட்சிக்காரர்களே கடும் கண்டனம் தெரிவித்தனர். இத்தனை மிரட்டல்களையும் தாண்டி காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. அந்த சமயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மாநிலக் கட்சிகள் விலகத் தொடங்கின. சிவசேனா மற்றும் சிரோமனி அகாலி தளம் கட்சிகளும் பாஜகவுடன் மோதலில் இறங்கின.
ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பாஜக தலைவர்களுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்தார். அந்த விருந்தில் கலந்துக் கொள்ள அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் தயாராக இருந்தனர். பீகார் மாநில விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தவர்களிடம் கடைசி நேரத்தில் விருந்து ரத்து செய்யப்பட்டது தெரிவிக்கப் பட்டது. அப்போது நிதிஷ் குமார் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு குஜராத் அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு பீகார் வெள்ள நிவாரண நிதியாக அளித்த ரூ. 5 கோடியை நிதிஷ்குமார் திரும்ப அளித்தார். அதன் பிறகு நடந்த பீகார் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிதிஷ்குமார் அப்போதைய குஜராத் முதல்வரான மோடி பிரசாரம் செய்யக் கூடாது என்னும் நிபந்தனையை விதித்து வெற்றி பெற்றார்.
பாஜக இது போல் 2013 வரை தோல்வியை சந்தித்து வந்துள்ளது. ஆனால் 2014 மற்றும் 2019 ஆம் வருடத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. அரசியல் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் சகஜமானதாகும். எல்லா கட்சிகளுமே அபார வெற்றியையும் படு தோல்வியையும் சந்தித்துள்ளன. எனவே தற்போது தோல்வி அடைந்த கட்சிகளின் தொண்டர்கள் இதை மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டும்