பெங்களூரு:

ராஜினாமா குறித்து முடிவு செய்ய அவகாசம் தேவை என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அதற்கு பதிலடியாக, சபாநாயகரை சந்திக்க தங்களுக்கு அவகாசம் தேவை என அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்

குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்கள் இன்று காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் உத்தர விட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று, சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி உள்ளனர். இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பையில் தங்கியுள்ளனர்.  அதிருப்தி எம்எல்ஏக்களான  எம்.டி.பி.நாகராஜ், ரமேஷ் ஜார்கி ஹோளி, எச்.விஸ்வநாத், மகேஷ்குமட்டஹள்ளி, எச்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, பி.சி.பாட்டீல், கோபாலையா, சிவராம் ஹெப்பார், நாராயணகெளடா, பிரதாப்கெளடா பாட்டீல்  ஆகிய 13 பேரும், இன்று செவ்வாய்க்கிழமை விதானசவுதாவில் உள்ள அறை எண் 119-ல் நேரில் ஆஜராகுமாறு பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

ஆனால், அவர்கள் தங்களுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் தேவை என்று  கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்குபதில் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்களது ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது அவரது பாணியிலேயே தங்களுக்கு கால அவகாசம் தேவை என எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இதன் காரணமாக, குமாரசாமி அரசு மீதான   நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.