திருச்சி,

மிழக சட்டமன்றத்தில் கடந்த 18ந்தேதி நடைபெற்ற, எடப்பாடி  நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது பெரும் ரகளை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகரின் உத்தரவின்பேரில்  எதிர்க்கட்சியினரை சபை காவலர்கள்  இழுத்தும், தள்ளியும்,  குண்டுகட்டாக தூக்கியும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த மோதலில் எதிர்க்கட்சி  தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. அவரும் தாக்கப்பட்டதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும்  மாவட்டத் தலைநகரங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக  இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  திமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளார். அவருடன்  மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்  கே. என். நேரு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம்  காலை  9 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால், ஸ்டாலின் 8.45  மணிக்கே உண்ணாவிரத மேடைக்கு வந்து விட்டார். அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் ஆரம்பமானது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது