டில்லி:

மிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு  பல கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு  அந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவது குறித்தும் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து  மத்திய  சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே செய்தியாளர்களிம் கூறியதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால், அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றார்.

மேலும், சென்னை எண்ணூர் அருகே கடலில் கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பற்றி மத்திய கப்பல் போக்குவரத்து துறையிடம் விரிவான அறிக்கை கேட்டு இருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

காவிரியின் குறுக்கே  கர்நாடகம் அணை கட்டுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தவே,  அந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் எங்கள் அமைச்சகத்துக்கு வரவில்லை என்றார்.

மேலும், சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் காற்றில் மாசு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. காற்றில் மாசு அதிகரிப்பதை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்றார்.

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி விபத்துள்ளானதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை எண்ணூர் துறைமுக கழகத்துக்கு அனுப்பி வைத்தோம். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாடு தொடர்பான நிறுவனம் ஒன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் மூலம் தினசரி அடிப்படையில் விரிவான அறிக்கையை கேட்டு இருக்கிறோம்.

இது தவிர தமிழக அரசும், கடலோர காவல் படையும் எங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார்கள். அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் முழுமையான தகவல் கிடைத்த பிறகு இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் அஜய் நாராயண் ஜா கூறினார்.