பெங்களூரு:

பெங்களூருவின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் மூன்றரை வயது சிறுமிக்கு, அப்பள்ளியில் உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. மஞ்சுநாத் என்ற அந்த உதவியாளர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக ‘‘சில தினங்களுக்கு முன் அந்த சிறுமி அடிவயிற்றில் வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டரிடம் அழைத்து சென்ற சோதனை செய்தபோது தான் பாலியன் துன்புறுத்தல் நடந்திப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் பல சிறுமிகள் இதேபோன்ற புகாரை தெரிவித்தனர்’’ என்று அவர்களது பெற்றோர் தற்போது தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் இயக்குனர் வீனா கூறுகையில்,‘‘ மஞ்சுநாத் இந்த பள்ளியில் 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவரை பணி அமர்த்துவதற்கு முன் பள்ளி முதல்வர் மூலம் முழு விசாரணை நடத்தப்பட்டு தான் சேர்த்தோம். பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவு முழுவதையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்’’ என்றார்.

ஆனால், பள்ளியின் முதல்வர், மஞ்சுநாத்தை பாதுகாக்க முயல்வதாக பெற்றோர் புகார் தெரிவிதுள்ளனர். ‘‘மஞ்சுநாத்தை ஜாமினில் எடுக்க முதல்வர் முயற்சி செய்கிறார். மஞ்சுநாத் எந்த தவறும் செய்யவில்லை என்று முதல்வர் வாதிடுகிறார். அவர் பல ஆண் டுகளாக பள்ளியில் வேலை செய்து வருவதால் அவரை காப்பாற்ற முதல்வர் முயற்சித்து வருகிறார்’’ என்று பெற்றோர் தெரிவித்தனர்.

இதேபோல், 2014ம் ஆண்டு பெங்களூரு விப்கியோர் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜிம் பயிற்சியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற பெற்றோரின் புகாரை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்தது. வயிறு வலி என்று கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். இதனால் விஷயம் போலீஸ் கவனத்துக்கு அப்போது கொண்டு செல்லப்பட்டது.