டில்லி

ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எங்களுடையது என கருத்து தெரிவித்த உத்திரப் பிரதேச மாநில அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி சமீபத்தில் ”ராமர் கோவில் கட்டுவது நமது முடிவைப் பொறுத்ததாகும் ஏனெனில் உச்சநீதிமன்றம் எங்களிடம் உள்ளது.  அதுமட்டுமின்றி நாடு, சட்டம் கோவில் அனைத்தும் எங்களிடம் உள்ளது” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   தற்போது உச்சநீதிமன்றத்தில் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது குறித்த வழக்கு விசாரணை தினசரி நடந்து வருகிறது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான்,  தாம் அயோத்தி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் தம்மையும் தமது காரியதரிசியையும் கிண்டலும் கேலியும் செய்வதோடு மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் தம் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படவில்லை எனவும் வழக்கில் இஸ்லாமியர்கள் பிரதிநிதியாகச் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

 

இவ்வாறு மிரட்டப்படுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமைந்துள்ள அரசியல் சாசன அமர்வு கண்டித்துள்ளது.   மேலும் உச்சநீதிமன்றம் எங்களுடையது என உத்திரப் பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி தெரிவித்த கருத்துக்கும் அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.  இப்படிப்பட்ட கருத்துக்களை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது எனவும் இத்தகைய கருத்துக்களை யார் தெரிவித்தாலும் அது கூர்ந்து கவனிக்கப்படும் எனவும் அமர்வு தெரிவித்துள்ளது.