பெங்களூரு

ற்போது சாலைகள் நன்றாக உள்ளதால் விபத்துக்கள் நேரிடுவதாகக் கர்நாடக மாநில துணை முதல்வர் கோவிந்த் கஜ்ரோல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் தற்போது புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இதனால் போக்குவரத்து மீறலுக்கு சுமார் 10 மடங்கு வரை அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.   இதனால் மக்களில் பலர் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.  அவர்களில் பலர் சாலை அமைப்பு உள்ளிட்ட எவ்வித உட்கட்டமைப்பு பணிகளையும் செய்யாமல் அபராதத்தை அதிகரித்தது குறி கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில்  உள்ள கோவிந்த் கஜ்ரோல் பொதுப் பணித்துறையைக் கவனித்து வருகிறார்.   அவரை சமீபத்தில் சந்தித்த செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகள் எழுப்பி உள்ளனர்.   அதற்கு கோவிந்த் கஜ்ரோல், “போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத அதிகரிப்பு எனக்கும் பிடிக்கவில்லை.  இது குறித்து மாநில அரசு சரியான முடிவு எடுக்கும்.

அதே நேரத்தில் சாலைகள் சரியாக இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுவதாகச் சொல்வது  சரியாக இல்லை.   பெரும்பாலான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றன.  அந்த சாலைகள் நன்றாக உள்ளன.  நன்றாக உள்ள சாலைகளில் வாகனங்கள் 100 கிமீ மற்றும் 120 கிமீ வேகத்தில் செல்கின்றன.  இதனால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஹ்ச் காலப்பா தனது  முகநூல் பக்கத்தில் கஜ்ரோலின் இந்த பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.