லக்னோ,

உத்திரபிரதேச அரசின் அதிரடி நடவடிக்கையால் பாரம்பரியமிக்க இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் மாட்டிறைச்சிக் கடைகள் மற்றும் அனுமதியி்ல்லாத ஆடு,மீன் இறைச்சி கடைகள் மூடப்படும் என்றும் மாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவின் தேர்தல்அறிக்கையில் சொல்லப்பட்டது.

தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாஜக லக்னோ, கான்பூர், வாரணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பல்வேறு சிற்றூர்களிலும் உள்ள காவல்துறை உதவியுடன் ஏராளமான மாட்டிறைச்சி கடைகளை மூடி வருகிறது.

இந்நிலையில் லக்னோவில் இன்று Tunde Ke Kabab  என்ற பிரபலமான இறைச்சி உணவு தயாரிப்புக்கு பெயர்பெற்ற கடை மூடப்பட்டது. இது 1905 ஆம் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. ஆனால் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கூறி போலீசார் இந்த கடையை அடைக்க வைத்துள்ளனர்.

இதேபோல் அமினாபாத் நகரிலும், அக்பரிகேட் என்ற இடத்திலும், செயல்பட்டுவந்த பிரபல கோழி, ஆட்டிறைச்சி கடைகளும் இன்று மூடப் பட்டன. லக்னோவில் மட்டும் இதுவரை பிரபலமான 9 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் 200க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மீரட்நகரில் மூன்று எருமைக்கறி விற்கும் கடைகள் மூடப்பட்டதாகவும் அவை மூன்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரால் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாரணாசியிலும் பல கடைகள் மூடப்பட்டன.

காசியாபாத்தில் அனுமதியின்றி நடத்துவதாக கூறி 34 இறைச்சிக்கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஹாத்ராஸில் இருந்த மூன்று இறைச்சி கடைகள் தீக்கிரையாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.