லக்னோ: 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இம்மாதம் இறுதியில்  தீவிர பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் உள்பட5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்  நடைபெற உள்ளது. இதையடுத்து, இப்போதே தேர்தல் பிரசாரம் களைக் கட்டி உள்ளது. உ.பி.யில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் போராடி வருகிறது. மேலும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தனித்தனியாக போட்டியிட்டால், அது பாஜகவுக்கு சாதமாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் பாஜக  தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்த நிலையில், அங்கி இந்திய காங்கிரஸ் தலைமை சார்பில், உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளரான பூபேஸ் பாகெல் தலைமையில் நேற்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, பிரியங்கா காந்தி, நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உ.பி.யின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரம் மற்றும் யாத்திரை மேற்கொண்டு வரும் பிரியங்கா, இந்த மாத இறுதியில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.