காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உச்சநீதிமன்றம் கேள்வி

Must read

புதுடெல்லி: 
காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?  என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு மிகவும் அதிகரித்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, டெல்லியில் சில அவசர நடவடிக்கைகளை எடுங்கள் என்றும், 2 நாட்கள் டெல்லியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பது பற்றி யோசிக்க முடியுமா? என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
காற்று மாசுபாடு என்பது ஒரு தீவிரமான முக்கிய பிரச்சினை.காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வைக்கோல் எரிக்கச் சந்தையில் 2-3 வகையான, 2 லட்சம் இயந்திரங்கள் உள்ளன.  ஆனால் விவசாயிகளால் அவற்றை வாங்க இயலாது.  விவசாயிகளுக்கு மத்திய/மாநில அரசுகள் ஏன் இந்த இயந்திரங்களை வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், டெல்லியின் காற்றின் தரக் குறியீடு-500ல் இருந்து 200 புள்ளிக்காவது எப்படிக் குறைக்கலாம்? என்று சொல்லுங்கள் என்றும் கேட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் நவ.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

More articles

Latest article