உ.பி:
2017ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரசார யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 6தேதி பிரசார யாத்திரையை தொடங்குகிறார். மொத்தம் 2500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
இந்தியாவில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது உ.பி. தேர்தல். 2019ல் நடைபெற இருக்கும் பார்லிமென்ட்  தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தல்  பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமானது.
rahul
இதையொட்டி உ.பி.யில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
காங்., சார்பில் முதல்வர் வேட்பாளராக, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்,  களமிறக்கப்பட்டு உள்ளார். ஷீலா தீட்சித், அம்மாநிலத்தின், மறைந்த முதுபெரும் காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா சங்கர் தீட்சித்தின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஆத்மி கட்சியினர் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. அங்கு, முதல்வர் அகிலேஷ் யாதவின், ஆளும் சமாஜ்வாதி கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும், சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.
உ.பி. சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி காங். துணை தலைவர் ராகுல், மாநிலம் முழுவதும் 2500 கி.மீ. பிரசார யாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங். துணை தலைவர் ராகுல் செப். 6-ம் தேதி முதல் தனது பிரசார யாத்திரை துவக்குகிறார். உ.பி.யில் கிழக்கு மாவட்டமான தியோரியாவில் இருந்து துவங்கி 39 மாவட்டங்களில் 223 தொகுதிகளில் 2500 கி.மீ. பயணம் செய்து விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரை சந்திக்கிறார். இதில் பெரிதாக மெகா பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்தும் திட்டமில்லை.
கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது ராகுல், உ..பி மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஏழை குடிசை வீடுகளில் தங்கி அவர்களுடன் உணவு அருந்துவது , அப்பகுதி கிராமவாசிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடுவது என தனது பிரசாரத்தை மேற்கொண்டார். ராகுலின் இந்த அணுகுமுறை எடுபடவில்லை. தேர்தலில் காங். படு தோல்வியை சந்தித்தது நினைவிருக்கலாம்.