ராய் பரேலி: உத்திரப்பிரதேசம் உன்னாவோவைச் சேர்ந்த இளம்பெண்ஒருவர் கடந்த 2018 ல் சில நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  அது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் செல்லும் வழியில் அப்பெண் ஐந்து பேர் கொண்ட கும்பலால் தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

சம்பவ தினத்தன்று, ராய் பரேலி நீதிமன்றத்திற்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறாள்.  சிறிது தூரம் கடந்து கவுரா திருப்பத்தை அடைந்தவுடன், ஹரிஷங்கர் திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், ஷிவம் திரிவேதி மற்றும் ஷுபம் திரிவேதி ஆகிய ஐந்து பேர் குழு அப்பெண்ணை வழிமறித்துத் தாக்கி அவள் மேல் தீ வைத்தனர்.

அவள் உடலெங்கும் தீ பற்றியெறியும் நிலையில், உதவி நாடி 1 கி,.மீ தூரம் வரை ஓடி வந்திருக்கிறாள்.  அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திர பிரகாஷ் என்பவர் அவளைப் பார்த்து, போலீசாருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்.

அச்சம்பவத்தை நேரில் பார்த்த அவர் கூறியது; “எரியும் நிலையில் அவள் ஓடி வந்ததைப் பார்த்ததும் நான் யாரோ சூனியக்காரி என்று நினைத்துக் கோடாரியைக் கொண்டு தாக்க முயன்றேன்.  பின்னர், அவள் யாரென்று அறிந்ததும்  அவளுக்கு உதவ முற்பட்டேன்“,என்று கூறினார்.

மேலும், அவர் நாங்கள் 100 க்கு ஃபோன் செய்து அவள் முகத்தினருகே வைத்து அவளை நேரடியாகக் போலீசாரிடம் பேச வைத்தோம்.  சிறிது நேரம் கழித்து போலீசார் வந்து அவளைக் கொண்டு சென்றனர்“, என்றார்.

தன் மீது நெருப்பு வைத்தவர்கள் பற்றி அப்பெண் கூறுகையில், அந்த ஐந்து பேரில் ஷிவம் மற்றும் ஷுபம் திரிவேதி ஆகிய இருவரும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்த குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவள் அடையாளம் காட்டியிருந்தாள்.

தற்போது 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவளைப் பற்றி, மருத்துவர் அஷுதோஷ் துபே கூறுகையில், அவளது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவர்களின் ஒரு குழு அவளுக்குச் சிகிச்சையளித்துக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய ஐந்து பேரும் உத்திரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.