சென்னை: பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் போன்களை அன்லாக் (unlock)  செய்ய தற்போது, பாஸ்வேர்டு, பேட்டர்ன்ஸ்,  கைரேகை, கருவிழிகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அதற்கு பதில் பயனர்களின்  ‘மூச்சுக் காற்று’ பயன்படுத்த முடியும் என  சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட் போனை ‘ப்ரீத்  (மூச்சுக்காற்று)’ மூலம் அன்லாக் செய்ய முடியும்.  கிரவுண்டிங் டெக் பயோமெட்ரிக்ஸின் மூலம் ஆராய்ச்சி செய்து வரும்   ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தனிநபர்களை அவர்களின் சுவாச முறைகளின் அடிப்படையில் அடையாளம் காண ஒரு தனித்துவமான அமைப்பை உருவாக்குகின்றனர், இது ஸ்மார்ட்போன் அன்லாக் மற்றும் மருத்துவ நோயறிதலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சியின் மற்றொரு அங்கமாக அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தாராளமாக நடமாடுகிறது. மேலும்  டிஜிட்டல் பண பரிவரித்தனை ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாக மாறி உள்ளதால், ஸ்மார்ட் போன்களும் அத்தியாவசியமாகி விட்டது. அதே வேளையில் நவீன யுகத்துக்கு ஏற்றவாறு பெரும்பாலோர் தங்களது முக்கிய தரவுகளை மொபைல் போன்களிலேயே சேமித்து வைப்பதும், இதனால் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் தொடர்கதையாகிறது.

அது மட்டுமின்றி, பலர் தங்களது ஸ்மார்ட் போன்களை திறக்க பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை மறந்து விடுவதால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில்  போனில் உள்ள  தரவை மீட்டெடுப்பது அல்லது மீண்டும் உள்நுழைவது எப்படி? என மண்டையை குழப்பிக்கொள்வதை தவிர்க்கும் வகையில்,  சமீப காலமாக கைரேகை, கருவிழி, முக அசைவுகள் மூலம் ஸ்போர்ட் போன்கள் திறக்கும் வகையில்  (Un Lock) மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பயனர்களின் மூச்சுக்காற்று மூலம் ஸ்மார்போன்களை அன்லாக் செய்வது குறித்து சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இதில் வெற்றி கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, பெரும்பாலானவர்கள், தங்கள் மொபைலில் பூட்டு இருந்தால், அது பேட்டர்ன் அல்லது ஃபேஸ் ஐடி அல்லது கைரேகையைப் பயன்படுத்தி  திறந்து வருகின்றனர். இது  கடவுச் சொல்லை விட எளிதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.

இந்த நிலையில்தான் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் பயனர்களின் மூச்சுக்காற்றை பயன்படுத்தி, பையோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் போனை திறக்கலாம் (Unlock) என தெரிவித்து உள்ளனர். அதாவது, ஸ்மார்ட் போன்களை அன்லாக் செய்ய, மனிதனின் மூச்சுக்காற்றையும் பயன்படுத்தலாம் என்றும், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதாவது, ஸ்மார்ட் பயனர்களின் நுழையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக்காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம், அந்த தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் போனையும் திறக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.