சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும்  வகையில் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னரே இதுபோன்ற வசதிகளை செய்யாமல், தற்போது டெண்டர் கோரியுள்ளது.

ஏற்கனவே சென்னை திநகர் பகுதியில் பேருந்து நிலையத்தையும், ரயில்வே நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைபாதை மேம்பாலம் செயல்பாட்டில் உள்ள நிலையில், அதுபோல கிளாம்பாக்கத்திலும் அமைக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் புறநகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் லக்கேஜ்களுடன்  அங்கு செல்ல முறையான போக்குவரத்து வசதி செய்யாத நிலையில், திமுக அரசு அவசர கதியில் பேருந்து நிலையத்தை திறந்து உள்ளதால், அந்த பகுதியில் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அங்கிருந்து நகருக்குள் வர கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதுடன் பல மணி நேர கால விரயமும் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ. நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. ஆகாய நடைபாதை அமைக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ.400 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இச்த பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கு முன்னரே, இதுபோன்ற ஏற்பாடுகள், அதாவது, பொதுமக்கள் எளிதாக கிளாம்பாக்கம் வரும் வகையில்,  ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மாநகர பேருந்து நிலையம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு அதை மனதில் கொள்ளாமல், பேருந்து நிலையத்தை அடாவடியாக திறந்து, பேருந்து பயன்பாட்டையும் அங்கு முற்றிலுமாக மாற்றியபிறகு, கண்கெட்ட பிறகு சூரிய சமஸ்காரம்போல, தற்போது ரயில் நிலையம்,  நடைபாதை மேம்பாலம் என அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.