ராமேஸ்வரம்: தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு, மாநில பாஜக சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில்,  ஊழலுக்கு எதிராக “என் மண் என் மக்கள்”  யாத்திரை நேற்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கியது. பிரதமர் மோடியின் தமிழ் முழக்கம் என்ற பெயரில் பாத யாத்திரையைத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தொடங்கி உள்ளார்.  இந்த பாத யாத்திரை தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள  உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று பிற்பகல்  இராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் ராமேஸ்வரம் தனியார் விடுதியில் அமித் ஷா தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை 5: 45 மணியளவில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலின் கிழக்கு கோபுர வாயிலில் அமித்ஷாவுக்கு நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  தொடர் கோவில் நிர்வாகம் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து கோவில் வளாகத்தை பார்வையிட்ட அமைச்சர் அமித் ஷா விஸ்வரூப ஆஞ்சநேயர், 21 தீர்த்தங்கள் உள்ளிட்ட பிற தரிசனங்களை மேற்கொண்டார். அவருடன் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், சி.டி. ரவி உள்ளிட்டவர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள  உள்துறை அமைச்சர்,  “ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுதது, காலை 10.30 மணி அளவில் எர்காடு கிராமத்தில் இருக்கும் கட்சி நிர்வாகியின் வீட்டிற்கு சென்று பார்வையிடுகிறார். பின் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு திரும்புகிறார். பின்னர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குறித்த “ கலாம் நினைவுகள் இறப்பதில்லை” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். அதனை தொடர்ந்து கலாமின் வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்து பேசுகிறார்.

மதியம் 12.30 மணியளவில் பாம்பன் குந்துகால் பகுதியில் இருக்கும் விவேகானந்தர் மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். அதை தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.