டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படும் நிலையில், மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட இருக்கிறார் என இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரப் பதவி ஏற்றது முதல், அந்நாட்டில்  சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அந்நாட்டில்  சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் முதலில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்கள்  அங்குள்ள தடுப்பு மையங்களில்  தங்க வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கை கால்களில் விலங்கிட்டு, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி, அமெரிக்காவின், ‘நாடு கடத்தல் உத்தரவுடன் காத்திருக்கும் பட்டியலில்’  18,000 பேர் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.  இதனைத் தடுக்க இந்திய தூதரகம் உதவ முடியாது தெரிவித்துள்ள இந்திய அரச,  சட்டப்படி தவறு செய்யாமல் இருந்தும் நாடு கடத்தப்படுவதாக நம்பினால், அவர்களால் இந்திய தூதரகத்திடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் முதல்கட்டமாக 104 இந்தியவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் , கைதிகள் போல கை விலங்குடன், காலில் சங்கிலியுடன், விமானத்தில்  ஏற்றப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டனர்.  இந்த விவகாரத்தை இந்திய எதிர்க்கட்சிகள் பூதாகாரமாக்கியதுடன், நாடாளு மன்றத்திலும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சட்டப்பூர்வமான குடியேற்றத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும். உலக நாடுகளின் கடமையே, சட்டவிரோத குடியேற்றங்களை திருப்பி அனுப்புவது” என்று கூறினார்.

அமெரிக்க கனவு பலருக்கு துயர கனவாக மாறி வருகிறது. சட்ட வழியில் குடியேறுபவர்களுக்கு மட்டுமே உறுதியான எதிர்காலம் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, வழிமுறைகளை சரியாக பின்பற்றி, சட்டப்படி வெளிநாடுகளில் வாழ்வதே சிறந்ததுஎன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  மேலும்,  487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறி உள்ளார்.  இந்த நபர்களில் 298 பேரின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன்,   “….நாடுகடத்தப்படுபவர்களை தவறாக நடத்தக்கூடாது என்பதை அமெரிக்க அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த வாரம் அமெரிக்கா  செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.