சென்னை: மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை ஜிஎஸ்டி குழுவினர் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி . 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு மற்றபொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோல மற்ற விகிதாச்சாரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால, அரசு மேலும் 500 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மத்தியஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்  “இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த இந்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இப்போது 5%, 12%, 18%, 28% ஆகிய அளவுகளில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விகிதங்களில் இதுவரை வரிவிலக்குப் பட்டியலில் உள்ள பல பொருட்களுக்கு 3% வரி விதிக்கப்படவுள்ளது; 5% வரி பட்டியலில் உள்ள சில பொருட்களின் மீதான வரி 3% ஆக குறைக்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள பொருட்களுக்கான வரி 8% ஆக உயர்த்தப்படவுள்ளது. அதேபோல், 12% வரி நீக்கப்பட்டு, அதில் உள்ள பெரும்பான்மையான பொருட்கள் 18% வரி பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களாலும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95% என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன.

இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விளைவுகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களின் துயரங்கள் உச்சம் தொடும். வரி விலக்குப் பட்டியலில் உள்ள பொருட்களும், 5% வரி பட்டியலில் உள்ள பொருட்களும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். உதாரணமாக சில்லறை விலை அரிசி, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 3% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டாலும், 5% ஜி.எஸ்.டி வரி பட்டியலில் உள்ள சமையல் எண்ணெய், தேயிலை, காபித்தூள், இன்சுலின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள், உரங்கள் ஆகியவற்றின் மீதான வரி 8% ஆக உயர்த்தப்பட்டாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் தங்களின் மற்ற தேவைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.

2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.14.89 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 10% அதிகம் ஆகும். அவ்வாறு இருக்கும் போது அதில் 33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட மக்கள் மீது கொடிய சுமையை சுமத்த முடியாது. இந்த உயர்வை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணங்களும் இல்லை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளின் வருவாய் இழப்பை இந்திய ஒன்றிய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டை இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும் .

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.