மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் ரீதியான ஒன்சைடு கேம் ஆடுகிறது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை எம்எல்ஏவும், நிதி அமைச்சருமான பிடிஆர் இன்று சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைத்தார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எய்ம்ஸ் விவகாரம், ஜிஎஸ்டி, மகளிர் உரிமைத்தொகை உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் கூறினார்.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில், மத்தியஅரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்ஸ் 95 சதவிகித பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு இன்னும் சுவர் கூட கட்டவில்லை. இந்த விஷயத்தில் மத்தியஅரசு, அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது.
மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு எல்லா திட்டங்களுக்கும் பிரதான் மந்திரி பெயரை வைத்து மத்தியஅரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது என்றவர், பல திட்டத்துக்கு பிரதான் மந்திரி என பெயர் வைத்து மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 75% மாநில அரசின் பங்கு, 25% பங்கு தான் ஒன்றிய அரசின் பங்கு. எனவே, ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. இதை திருத்தியே ஆக வேண்டும். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்” என தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த கேள்விக்கு, “மகளிர் உரிமை தொகை அளிப்பது தொடர்பாக பிற மாநிலங்களில் என்ன விதமான தரவுத்தளம் (Database) உள்ளது. ஒரு திட்டத்தை எவ்வாறு, எப்படி குழு அமைத்து செயல்படுத்துகிறார்கள் என ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.
“மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவது கால தாமதம் குறித்த கேள்விக்கு, குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு ஆகிவற்றிற்கு வரி விதிப்பது தொடர்பாகவும், ஜி.எஸ்.டி.க்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அறிக்கைகள் வருவது தாமதம் ஆவதே காரணம்
.ஜி.எஸ்.டி மரபு படி 3 மாதத்திற்கு ஒருமுறை கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, அறிக்கைக்காக காத்திருக்காமல் விரைவாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது” என கூறினார்.