சென்னை: தமிழக அரசு பேருந்துகளில்  நேற்று வரை 176.84 கோடி முறை பெண்கள் ‘ஓசி பயணம்’ மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்கு வரத்துதுறை தெரிவித்து உள்ளது.

தமிழகஅரசு நகர்ப்புறங்களில் ஓடும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்துள்ளது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களால் அவ்வப்போது சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது. பெண்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், கோவையில், மூதாட்டி ஒருவர், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் கேட்டு வாங்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சூழலில் அமைச்சர் பொன்முடி பேசிய ஓசி பயணம் தொடர்பான பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பெண்கள் ஓசியில் பேருந்தில் பயணம் செய்வதாக நான் விளையாட்டாகப் பேசியதை பெரிதாக்குகிறார்கள். இதை இவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், அக்டோபர் 5ம் தேதி வரை மாநிலம் முழுவதும  அரசு பேருந்துகளில் 176.84 கோடி முறை, பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என தமிழக அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.