டெல்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி தொடர்பாக மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அத்துடன், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.
இதையட்டி, 2023ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள குடியரசு தின விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தயார் செய்ய திட்டமிட்டுள்ள அலங்கார ஊர்திகளின் பட்டியலை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்த்களின் மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன், மத்திய அரசின் தேர்வுக்குழு அலங்கார ஊர்திகளின் பட்டியலை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தமிழகஅரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு புறக்கணித்த நிலையில், இந்த ஆண்டு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து உள்ளது.