சென்னை: திமுக தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் அக்டோபர் 9ந்தேதி  திமுக பொதுக்குழு கூடும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் கடுமையான போட்டிகளுக்கு இடையே  நடைபெற்று வருகிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 30 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களின் பட்டியல் அதிகாரப்பூவர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இதே போல திமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்த காரணத்தால் புதிதாக யாரை நியமிப்பது என்பது குறித்தும்  விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கட்சி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுகளும் நடைபெற உள்ளது.

இதையொட்டி,  அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9ந்தேதியன்று  காலை 9 மணிக்கு அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க அக்டோபர் 9ந்தேதி  திமுக பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அக்டோபர் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்கஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.