மதுரை: இந்திய குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு ஒருசேர அநீதி இழைத்துள்ளது என மதுரை எம்.பி.சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியஅரசு நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை கொண்டு, மாநில கல்வித்திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஏற்கனவே நீட் போன்று பல்வேறு நுழைவு தேர்வுகள் கொண்டுவந்து பள்ளிக்குழந்தைகளை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வரும் நிலையில், தற்போது  மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், ஆங்கிலத்துக்கு மாற்றாக நாடு முழுவதும் இந்தி மொழிதான் கொண்டு வர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு வெங்கடேசன் ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகங்களை மத்தியஅரசு இழைத்துள்ளதாக  கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ,’ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்(ICPS), இனி ‘மிஷன் வாத்சல்யா’ என அழைக்கப்படுமாம். சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 47 கோடி குழந்தைகள் நிறைந்த தேசம் இது. திட்டத்தின் பெயர் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் ஒன்றிய அரசு அதற்கான நிதிஒதுக்கீட்டிலும் அமலாக்கத்திலும் செலுத்திய கவனம் என்ன என்பதுதான் கேள்வி.

இதோ பட்ஜெட் 2022க்கு பிறகு வந்த செய்திகள்

  • சுருங்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பட்ஜெட் ஒதுக்கீடு – டெக்கான் கிரானிகில்
  • மோடி பதவி ஏற்ற காலத்தில் இருந்து பாதியாகிப் போன குழந்தைகளுக்கான பட்ஜெட் பங்கீடு – தி வயர்
  • பத்தாண்டுகளில் இதுவே குழந்தைகளுக்குக் குறைவான ஒதுக்கீடு தந்த பட்ஜெட் (பிசினஸ் டுடே)
  • சமஸ்கிருதம் முக்கியமன்று ஒன்றிய அரசே… குழந்தைகள் முக்கியம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு. கொரோனா சூழலுக்குக் குழந்தைச் சமூகமே மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் இந்த நிதிக்குறைப்புப் பெரும் விளைவுகளை உருவாக்கக் கூடியது.இந்தியக் குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் ஒரு சேர வஞ்சகங்கள் செய்வதைக் கைவிடுங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.