சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மத்தியஅரசு மேலும் குறைந்துள்ளதாக, தமிழக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் குடிசை முதல் கோபுரம் வரை அனைத்து இடங்களில் கேஸ் (சமையல் எரிவாயு) புழக்கம் அதிகரித்துள்ளதால், ஸ்டவுக்கு தேவையான மண்ணெணெய் பயன்பாடு குறைந்து விட்டது.  இருந்தாலும் சில ஏழை மக்கள், கிராம மக்கள் இன்னமும் மண்ணெண்ணெய்  கொண்டு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ்கள் மூலம் தங்களது சமையல் பணிகளை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில்தான், மத்தியஅரசு, மாநிலங்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய்  ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு 20சதவிகிதம் குறைந்த நிலையில், தொடர்ந்து, குறைக்கப்பட்டு வந்தது. தற்போது,  மேலும் குறைக்கப்பட்ள்ளது.

ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த அளவு ஒரு லிட்டராக குறைக்கப்பட்டது. பின்னர், சென்னை போன்ற நகரங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்எண்ணை விநியோகிப்பதே அரிதாக உள்ளது.

2011-ம் ஆண்டு 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயைத் தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்தது. அதன்பின் 2012-ம் ஆண்டு 39 ஆயிரத்து 429 கிலோ லிட்டராகக் குறைந்தது.  2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆயிரத்து 148 லிட்டராகக் குறைக்கப்பட்டது. இது 2019 செப்டம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 624 லிட்டராக மேலும் குறைக்கப்பட்டது. இவ்வாறாக மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைத்ததால், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மாதம் 3 லிட்டர் என வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் 1 லிட்டராக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. (இது குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதலாக வழங்கப்படும்) தற்போது மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி, தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்து உள்ளது என்று  தெரிவித்துள்ளார். 2021ல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022ல் 4,500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 2,300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.