பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு அமைத்த பணி குழு பரிந்துரைத்துள்ளது, இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

1929 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த சிறுவர் விவாக கட்டுப்பாடு சட்டத்தில் 1978 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பெண்களைக் காப்பாற்ற, சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது அவசியம், பெண்கள் மற்றும் மகளிர் நலனில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி 2020 ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2020 ஜூன் மாதம் ஜெயா ஜெய்ட்லி தலைமையில் அமைக்கப்பட்ட பணிக்குழு பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசித்து பெண்களின் திருமண வயதை 22 அல்லது 23 ஆக உயர்த்த பரிந்துரை செய்து 2020 டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.