டில்லி,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு மசோதாக் களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் தலாக் முறையை ஒழிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளது.

இந்த முத்தலாக் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை யடுத்து, இந்த மசோதா ஓரிரு நாளில்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய பெண்களின் வாழ்வை சீர்குலைக்கும் தலாக்-குக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய பெண்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர். சாயிரா பானு என்ற பெண் உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையில், 5 சமுதாயத்தை சேர்ந்த வெவ்வேறு நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன பெஞ்சு  விசாரித்து வந்தது.

விசாரணையின்போது, இஸ்லாமிய அமைப்புகள் பல கருத்துக்களை தெரிவித்தன. முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் சார்பாக, முத்தலாக் 1400 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமுதாய நடைமுறை  அதை மாற்றக்கூடாது என்று கூறியது.

ஆனால், நீதிபதிகள் தலாக் முறை மற்ற நாடுகளில் பின்பற்றப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தலாக் சட்டத்தை ரத்து செய்தால் என்ன செய்வீர்கள் என்று மத்தியஅரசுக்கும் கேள்வி விடுத்தினர். அப்போது மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர், முத்தலாக் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்று கடந்த மே மாதம் விசாரணையின்போது  தெரிவித்திருந்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ‘‘முத்தலாக் பாவச் செயல் என கூறுகிறார்கள். பாவச் செயல் எப்படி மதச் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்க முடியும்?  உலகம் முழுவதும் தலாக் முறை பின்பற்றப்படவில்லை.

இந்த முறை பயங்கரமானது மற்றும் மோச மானது. எது பாவப்பட்ட செயலோ, அதை வழக்கமாக பின்பற்ற முடியாது. மத அடிப்படையில் மோசமானது, சட்டமாக ஏற்க முடியாது. ஒழுக்க ரீதியாக தவறான விஷயம், சட்டரீதியாக சரியாக இருக்க முடியாது’’ என்று அதிரடியான கருத்துக்களை கூறினர்.

முஸ்லிம் சட்டவாரிய வழக்கறிஞர் ஆஜரான பிரபல வழக்கறிஞர் கபில்சிபல்,  ‘‘அரசு சட்டம் கொண்டு வர விரும்பினால் கொண்டு வரட்டும். ஆனால், நாங்கள் எந்த சட்டமும் வைத்துக் கொள்ளக் கூடாது என  கூறுவதை ஏற்க முடியாது என கூறினார்.

அதைத்தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வு நீதிபகளில் 3 பேர் முத்தலாக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 2 பேர் அது மத உரிமை என்றும் தீர்ப்பு கூறினர்.

தீர்ப்பின் முக்கிய அம்சம்:

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரும், நீதிபதி நஜீரும், முத்தலாக் முஸ்லிம் மதத்தினரின் அடிப்படை உரிமை என்று கூறினர்.

ஆனால், நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோர், முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.

புனித குரானின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக முத்தலாக் இருப்பதால் அது ஷரியத்தை மீறும் வகையில் உள்ளது.

ஆதாரப்பூர்வமான திருமண ஒப்பந்தத்தை முத்தலாக் எனக் கூறி தன்னிச்சையான முறையில் வெளிப்படையாக முஸ்லிம் நபர் முறித்துக் கொள்ள உதவுகிறது இந்த வழக்கம்.

முத்தலாக்கை மத ஒழுக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத வேண்டும். அந்த வழக்கத்தை முஸ்லிம் மத சட்டத்தின் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்வது முற்றிலும் கடினமானது என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி குரியன் ஜோசஃப் கருத்து. இதே கருத்தை நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோரும் ஏற்றுக் கொண்டு தங்களின் தீர்ப்பில் ஆமோதித்துள்ளனர்.

முத்தலாக் என்பது உடனடியாகவும் மாற்றிக் கொள்ள முடியாததுமாக இருப்பதால், பிரிந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பே எழாமல் போகிறது.

அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கும் அரசியலமைப்பின் 14-ஆவது விதியை மீறும் வகையில் முத்தலாக் உள்ளது.

முஸ்லிம் மதத்தின் முதலாவது சட்ட ஆதாரமாக புனித குரான் கருதப்படுவதால் அதற்கு மட்டுமே மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், 

 நீண்ட காலமாக ஒரு வழக்கம் சுயமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்காக அதை வெளிப்படையாக அனுமதிக்கக்கூடிய நடவடிக்கையாக அறிவித்து செல்லத்தக்கதாக ஆக்க முடியாது  என நீதிபதி ஜோசஃப் குரியன் தெரிவித்திருந்தார.

 சட்டம் அனுமதிக்கும் தலாக் முறையின் ஒரு வடிவமே முத்தலாக். அதேவளை, அதை சகித்துக் கொள்ளும் ஹனாஃபி பள்ளி கூட முத்தலாக்கை பாவத்துக்குரிய செயலாகக் குறிப்பிட்டுள்ளது என்ற நீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், முத்தலாக் முறையை ஒழிக்க வகை செய்யும் வகையில் இயற்றப்பட இருக்கும் புதிய  மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த புதிய மசோதா தற்போதைய கூட்டத்தொடரின்போது  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.