சென்னை: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2025ம் ஆண்டின்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. 2025ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்  என்பதால், அன்றைய தினம், நாடாளுமன்ற   கூட்டுக்கூட்டத்தில்,  குடியரசு தலைவர் உரையாற்று கிறார்.  இதைத்தொடர்ந்து,  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படும். பின்னர் அவை ஒத்தி வைக்கப்படும்

மீண்டும் மறுநாளான பிப்ரவரி 1ந்தேதி  அவை தொடங்கி நடைபெறும். அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எட்டாவது முறையாக நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பங்கேற்க உள்ள திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம். நாளை (29-ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்தச் சட்டம், யுஜிசி வரைவு கொள்கை, பொது சிவில் சட்டம் போன்றவற்றை அமல்படுத்த மத்தியஅரசு தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், அது  தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழலில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.